தூய ஆரோக்கிய அன்னை ஆலயம்
முகப்பு
பங்கை பற்றிதிருச்சபை தலைமைபங்குத் தந்தையர்கள்
திருப்பலி நேரங்கள்திருப்பலி கருத்துகள்செபங்கள்செயல்பாடுகள்
பங்குப்பேரவைஅன்பியங்கள்குழுக்கள்
காட்சி தொகுப்புஅறிவிப்புகள்தொடர்பு
மொழி
முகப்பு
பற்றி
பங்கை பற்றிதிருச்சபை தலைமைபங்குத் தந்தையர்கள்
சேவைகள்
திருப்பலி நேரங்கள்திருப்பலி கருத்துகள்செபங்கள்செயல்பாடுகள்
சமூகங்கள்
பங்குப்பேரவைஅன்பியங்கள்குழுக்கள்
காட்சி தொகுப்புஅறிவிப்புகள்தொடர்பு

தூய ஆரோக்கிய அன்னை

விரைவு இணைப்புகள்

  • ›முகப்பு
  • ›எங்களைப் பற்றி
  • ›திருப்பலி நேரங்கள்
  • ›காட்சி தொகுப்பு
  • ›அறிவிப்புகள்
  • ›எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

தொடர்பு தகவல்

திருப்பலி நேரங்கள்

View All →

© 2026 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

தனியுரிமை கொள்கைபயன்பாட்டு விதிமுறைகள்

கத்தோலிக்க செபங்கள்

அன்றாட பக்தி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான செபங்கள்

16 செபங்கள்
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாகுக. தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக! எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.
அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே. புனித மரியே இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.
(செபமாலையின் போது சொல்ல வேண்டிய செபம்) விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன். (“பிறந்தார்” எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்) இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகின்றேன். புனித, கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவமன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலைவாழ்வை நம்புகின்றேன். ஆமென்.
(ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் திருப்பலியில் சொல்ல வேண்டிய செபம்) ஒரே கடவுளை நம்புகிறேன். விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல தந்தை அவரே. கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர். இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர். தந்தையோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மனிதர் நமக்காகவும், நம் மீட்புக்காகவும் விண்ணகம் இருந்து இறங்கினார். (“மனிதர் ஆனார்” எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்) தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் சிலுவையில் அறையப்பட்டுப், பாடுபட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார். மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். விண்ணகத்துக்கு எழுந்தருளி,எல்லாம் வல்ல தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட, மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார். அவரது ஆட்சிக்கு முடிவு இராது. தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும், உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகிறேன். இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார். இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே. ஒரே புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும் திரு அவையை நம்புகிறேன். பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கிறேன். இறந்தோரின் உயிர்ப்பையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறேன். ஆமென்.
1. நாமே உன் கடவுளாகிய ஆண்டவர். எம்மைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது. 2. உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே. 3. ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இரு. 4. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட. 5. கொலை செய்யாதே. 6. விபசாரம் செய்யாதே. 7. களவு செய்யாதே. 8. பிறருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லாதே. 9. பிறர் மனைவிமீது ஆசை கொள்ளாதே. 10. பிறருக்கு உரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே. இந்தப் பத்துக் கட்டளைகளும் இரண்டு கட்டளைகளில் அடங்கும்: 1. எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை அன்பு செய்வது. 2. தன்னை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்வது.
(பாவ சங்கீர்த்தனத்தின் போது சொல்ல வேண்டிய செபம்) எல்லாம் வல்ல இறைவா! நீர் அளவில்லாத அனைத்து நன்மைகளும் நிறைந்தவராக இருப்பதால் எல்லாவற்றிற்கும் மேலாக நான் உம்மை முழு மனதோடு அன்பு செய்கிறேன். இப்படிப்பட்ட உமக்கு எதிராகப் பாவங்களைச் செய்ததால் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். எனக்கு இந்த மனத்துயரின்றி வேறு மனத்துயரில்லை. எனக்கு இந்தத் துக்கமின்றி வேறு துக்கமில்லை. இனி ஒருபோதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லையென்று உறுதி செய்கிறேன். மேலும், எனக்கு வலுவில்லாததால் இயேசு கிறிஸ்து பாடுபட்டு சிந்தின திரு இரத்தத்தால் என் பாவங்களை எல்லாம் கழுவி, மன்னித்து, உமது இரக்கத்தையும், விண்ணக நிலைவாழ்வையும் தந்தருளுவீர் என்று முழுமனதோடு நம்புகிறேன். திரு அவை நம்பிக்கையோடு கற்றுத் தரும் உண்மைகளை எல்லாம் நீரே கற்றுத் தந்தது என நான் உறுதியாக நம்புகிறேன். ஆமென்
தூய ஆவியே, எழுந்தருள்வீர் வானினின்று உமது பேரொளியின் அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர். எளியவர் தந்தாய், வந்தருள்வீர், நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர், இதய ஒளியே, வந்தருள்வீர். உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தண்மையும் தருபவரே. உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதலானவரே. உன்னத பேரின்ப ஒளியே, உம்மை விசுவசிப்போருடைய நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர். உமதருள் ஆற்றல் இல்லாமல் உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை, நல்லது அவனில் ஏதுமில்லை. மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வறட்சியுற்றதை நனைத்திடுவீர், காயப்பட்டதை ஆற்றிடுவீர். வணங்காதிருப்பதை வளைத்திடுவீர், குளிரானதைக் குளிர் போக்கிடுவீர், தவறிப்போனதை ஆண்டருள்வீர். இறைவா உம்மை விசுவசித்து, உம்மை நம்பும் அடியார்க்குக் கொடைகள் ஏழும் ஈந்திடுவீர். புண்ணிய பலன்களை வழங்கிடுவீர், இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர், அழிவிலா இன்பம் அருள்வீரே. – ஆமென்.
1. ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடன் திருநாள்களிலும் திருப்பலியில் முழுமையாகப் பங்கேற்க வேண்டும். இந்நாள்களின் புனிதத்தைப் பாதிக்கக் கூடிய செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும். 2. ஆண்டிற்கு ஒரு முறையாவது, தகுந்தத் தயாரிப்புடன் ஒப்புரவு அருள்சாதனத்தில் பங்கேற்க வேண்டும். 3. பாஸ்கா காலத்தில் ஒப்புரவு அருள்சாதனத்தில் பங்கேற்று திவ்விய நற்கருணை உட்கொள்ள வேண்டும். 4. திருஅவை குறிப்பிட்டுள்ள நாள்களில் இறைச்சி உண்ணாதிருக்க வேண்டும். 5. நோன்பு நாள்களில் ஒரு வேளை மட்டும் முழு உணவு உண்ணலாம். 5. திருஅவை குறிப்பிட்டுள்ள காலத்திலும், குறைந்த வயதிலும், திருமணத் தடை உள்ள உறவினரோடும் திருமணம் செய்யாதிருக்க வேண்டும். 6. திருஅவையின் தேவைகளை நிறைவேற்ற நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.
எல்லாம் வல்ல இறைவனிடமும், எப்பொழுதும் கன்னியான தூய மரியாவிடமும், அதிதூதரான தூய மைக்கேலிடமும், திருமுழுக்கு யோவானிடமும், திருத்தூதர்களான தூய பேதுரு, தூய பவுலிடமும், புனிதர் அனைவரிடமும், தந்தையே உங்களிடமும், நான் பாவி என்று ஏற்றுக் கொள்கிறேன். எனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால், எப்பொழுதும் கன்னியான தூய மரியாவையும், அதிதூதரான தூய மைக்கேலையும், திருமுழுக்கு யோவானையும், திருத்தூதர்களான தூய பேதுரு, தூய பவுலையும், புனிதர் அனைவரையும், தந்தையே உங்களையும், நம் தேவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன். ஆமென்.
(தினமும் காலை 6 மணிக்கும், மதியம் 12 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சொல்ல வேண்டிய செபம்) முத: ஆண்டவருடைய தூதர் மரியாவுக்குத் தூதுரைத்தார். எல்: மரியா தூய ஆவியாரால் கருவுற்றார். அருள் மிகப் பெற்ற மரியே… முத: இதோ ஆண்டவரின் அடிமை. எல்: உமது சொற்படியே எனக்கு நிகழட்டும். அருள் மிகப் பெற்ற மரியே… முத: வாக்கு மனிதர் ஆனார். எல்: நம்மிடையே குடிகொண்டார். அருள் மிகப் பெற்ற மரியே… முத: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படியாக. எல்: இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். முத: இறைவா! உம் திருமகன் மனிதர் ஆனதை உம்முடைய வானதூதர் வழியாக நாங்கள் அறிந்திருக்கிறோம். அவருடைய பாடுகளினாலும் இறப்பினாலும் நாங்கள் உயிர்ப்பின் மாட்சி பெற உமது அருளைப் பொழிவீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். எல்: ஆமென்.
(ஆண்டவரின் உயிர்ப்பு நாளிலிருந்து மூவொரு இறைவனின் திருநாள் வரை நின்று கொண்டு, தினமும் காலை 6 மணிக்கும், மதியம் 12 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சொல்ல வேண்டிய செபம்) முத: விண்ணக அரசியே! மனம் களிகூறும். அல்லேலூயா! எல்: ஏனெனில் இறைவனைத் தாங்கும் பேறு பெற்றீர். அல்லேலூயா! முத: தாம் சொன்னபடியே அவர் உயிர்த்தெழுந்தார். அல்லேலூயா! எல்: எங்களுக்காக இறைவனை மன்றாடும். அல்லேலுயா! முத: கன்னி மரியே! அகமகிழ்ந்து பூரிப்பு அடைவீர். அல்லேலூயா! எல்: ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார். அல்லேலூயா! முத: செபிப்போமாக! இறைவா, உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பினாலே உலகம் மகிழ்ந்திருக்க அருள் புரிந்தீரே! அவருடைய அன்னையாகிய கன்னி மரியாவின் பரிந்துரையால் நாங்கள் நிலைவாழ்வின் பெருமகிழ்வில் பங்கு பெற அருள் புரியும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். எல்: ஆமென்.
1. அதிதூதர் கரியேல் கன்னி மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னது இறைவாக்கு: கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். லூக்.2:5-7 சிந்தனை: இவ்வுலகைப் படைத்த இறைமகனுக்கு இவ்வுலகில் பிறக்க இடமில்லை. மாட்டுக் குடிலில் பிறந்தார். கந்தைத்துணியால் போர்த்தப்பட்டார். மிருகங்கள் தான் அவருக்கத் துணை. இருப்பினும் யோசேப்பும் மரியாளும் அமைதியாக மகிழ்ச்சியோடு இறைச் சித்தத்திற்கு அடிபணிகின்றனர். இந்த உலக காரியங்களில் தான் எனது மகிழ்ச்சி உண்டு என்று நான் எண்ணி வாழ்கின்றேனா? அல்லது எனது மகிழ்ச்சி திருப்தி எல்லாம் இறைவனின் எளிமையான வாழ்வுதான் எனது வாழ்வின் மையம் எனறு வாழ்கின்றேனா? செபம் : ஆண்டவரே! இயேசுவின் எளிய தாழ்ச்சியான மனநிலையை எனக்குத் தாரும். 2. கன்னி மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தது இறைவாக்கு : மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், ;பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்: உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. லூக். 1:45 சிந்தனை: நற்செய்தியைக் கேட்டவுடனே மரியாள் விரைந்து சென்று, எலிசபெத்திற்கு ஆவியானவரின் அருட்பொழிவை அளிக்கின்றார். தூய திருமுழுக்கு யோவானுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றாள். அவர் தாயின் வயிற்றிலே இருன்னும் பொழுதே தூய்மைப் படுத்தப்படுகிறார். நான் ஆர்வத்தோடு இயேசுவின் நற்செய்தியைப் பிறரோடு பகிர்ந்து கொள்கின்றேனா? ஊக்கத்தோடு பிறருக்கு இயேசுவின் அன்பைப் பகிர்ந்து கொள்ளத் துடிக்கின்றேனா? செபம் : ஆண்டவரே! கன்னிமரியாளைப்போல நானும் பிறரன்புப்பணியில் ஈடுபட எனக்கு வரந்தாரும். 3. இயேசு மனித அவதாரம் எடுத்துப் பிறந்தது இறைவாக்கு: கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். லூக்.2:5-7 சிந்தனை: இவ்வுலகைப் படைத்த இறைமகனுக்கு இவ்வுலகில் பிறக்க இடமில்லை. மாட்டுக் குடிலில் பிறந்தார். கந்தைத்துணியால் போர்த்தப்பட்டார். மிருகங்கள் தான் அவருக்கத் துணை. இருப்பினும் யோசேப்பும் மரியாளும் அமைதியாக மகிழ்ச்சியோடு இறைச் சித்தத்திற்கு அடிபணிகின்றனர். இந்த உலக காரியங்களில் தான் எனது மகிழ்ச்சி உண்டு என்று நான் எண்ணி வாழ்கின்றேனா? அல்லது எனது மகிழ்ச்சி திருப்தி எல்லாம் இறைவனின் எளிமையான வாழ்வுதான் எனது வாழ்வின் மையம் எனறு வாழ்கின்றேனா? செபம் : ஆண்டவரே! இயேசுவின் எளிய தாழ்ச்சியான மனநிலையை எனக்குத் தாரும். 4. இயேசு கோவிலில் அர்ப்பணிக்கப்படுதல். இறைவாக்கு: குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள். மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.ஏனெனில், ;ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும் ; என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு ஒருசோடி மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது. லூக். 2:25 சிந்தனை: புறவினத்தார்க்குக் கூட ஒளியாக இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்படுகின்றார். திருக்குடும்பம் ஏழ்மையில் இருந்தால், ஏழைகளின் காணிக்கையாகிய இரண்டு புறாக்களை எடுத்துச் சென்றனர். இறைவனது மீட்பைப் பற்றியும், இறைமகன் இயேசு இவ்வுலகின் ஒளியாய் உண்மையாய் வாழ்வாகவும் இருக்கின்றார். என்பதை வெளிப்படையாகப் பிறருக்கு அறிவிக்கும் தைரியம் எனக்கு உண்டா? செபம் : ஆண்டவரே! மரியாளின் தூய இதயத்தை எனக்குத் தாரும். 5. கோவிலில் இயேசுவைக் கண்டுபிடித்தல் இறைவாக்கு: அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார் அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். லூக். 2:48 சிந்தனை: பன்னிரண்டு வயதிலேயே இயேசு இறைத்தந்தைத் தனது அப்பா என்ற அனுபவத்தைப் பெற்றிருந்தார். ஆசிரியர்கள் சொல்வதைக் கவனமாய்க் கேட்டார். அறிவு சார்ந்த கேள்விகளை அவரிடம் கேட்டார் எனது குழந்தைகளை ஆன்மீக வாழ்வில் வளர்ச்சியடையக் கூடிய சூழ்நிலைகளை எனது குடுபத்தில் நான் உருவாக்குகின்றேனா? காசையோடு யோசேப்பும் மரியாளும் இயேசுவைத் தேடினது போல எனது குழந்தைகள்மீது நான் கரிசனையுள்ள அன்பை வெளிப்படையாகக் காட்டுகின்றேனா? செபம் : ஆண்டவரே உமது பிரசனத்தை ஒவ்வொரு நாளும் நான் ஆவலாய் தேட அருள்புரியும். . செபமாலை முடிக்கின்ற செபம் : முதன்மை வானதூதரான அதிதூதரான புனித மிக்கேலே, வானதூதர்களான புனித கபிரியேலே, இரபேலே திருத்தூதர்களான புனித பேதுருவே, பவுலே, யோவானே நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் இப்பொழுது வேண்டிக்கொண்ட இந்த ஐம்பத்து மூன்று மணி மன்றாட்டையும், எங்கள் புகழுரைகளோடு சேர்த்து, புனித கன்னி மரியாவின் திருப்பாதத்திலே பாத காணிக்கையாக வைக்க உங்களை மன்றாடுகிறோம். ஆமென்.
1. யோர்தானில் இயேசு திருமுழுக்கு பெறுதல். இறைவாக்கு: இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் " என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.மத். 3:16,17 சிந்தனை இயேசு யோர்தான் நதியில் திருமுழுக்கு பெற்ற பொழுது வானம் திறந்தது. அப்பாவின் குரல் ஒலித்தது. தூய ஆவியார் புறாவடிவில் அவர் மீது வந்திறங்கினார். இதோ!என் அன்பார்ந்த மகன் என்று தந்தை வெளிப்படையாக அவரை ஏற்றுக் கொள்கின்றார். ஆவியானவர் இயேசுவுக்கு அருள் பொழிவு அளித்து விடுதலைப் பணியை அவரது கரங்களில் ஒப்படைக்கின்றார். நான் பெற்ற திருமுழுக்கின் வழியாக நான் தந்தைக்குகந்த அருள் பெற்றவனாக, நற்செய்தியைப் போதித்து ஏழைகளின ஈடேற்றத்திற்காக உழைக்கின்றேனா? செபம் : ஆண்டவரே! நான் பாவத்திற்கு மரித்து, புதுமனிதனாக வாழ்ந்து இயேசுவின் இறைத் தூதுவனாக வாழ வரம் தாரும். 2. கானவூர்த் திருமண விழாவில் இயேசு இறைவாக்கு: இயேசு அவரிடம், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே " என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் " என்றார். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். யோவா. 2:4-6 சிந்தனை: இயேசுவின் பிரசன்னத்தால் எல்லாத் திருமணங்களும் சிறப்பு பெறுகின்றன. அன்னை மரியின் பிரசனத்தால் பற்றாக் குறை நீங்குகிறது. மகிழ்ச்சி என்ற புதிய இரசம் பெருகி வழிந்தோடுகின்றது. நமது வாழ்விலும் இயேசுவின் மகிமை வெளிப்பட் வேண்டும். விசுவாசம் நிலை நாட்டபடபட வேண்டும். என் வாழ்வில் பற்றைக்குறை வரும்பொழும் மனம் சோர்ந்து போகாமல், அன்னை மரியாளின் பரிந்துரையை நான் நாடுகின்றேனா? எனது காலியான வாழ்வின் ஜாடிகளும், நிறைவாழ்வென்ற புதிய இரசத்தால் நிரம்பும் என்று விசுவசிக்கின்றேனா? செபம் : ஆண்டவரே! உம்மீது அசைக்க முடியாத விசுவாசம் கொண்ட இதயத்தை எனக்குத் தாரும். 3. இறையரசை அறிவித்து மனந்திரும்ப அழைப்பு விடுகிறார் இறைவாக்கு: யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது: மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் "என்று அவர் கூறினார்.மாற். 1:15-16 சிந்தனை: இயேசு தனது வாழ்வில் மூன்று முக்கியமான செயல்களைப் புரிந்தார். செபித்தார். போதித்தார். குணமளித்தார். நம்மில் மனமாற்றல் இருந்தால் தான் விண்ணரசின் போதனைகளையும் மதிப்பீடுகளையும் நாம் பெற்று ஆன்மீகத்தில் வளரமுடியும். மனமாற்றம் என்பது ஒரு தொடர்கதை, நிகழ்வு, தனது பணியைப் பகிரங்கமாகத் தொடங்கிய பொழுதுமட்டுமல்ல, தனது வாழ்நாள் இறுதிவரை பல உவமைகளின் வழியாக மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்று இயேசு போதித்து வந்தார். நான் ஒவ்வொரு நாளும் நற்செய்தியைப் படித்துத் தியானித்து, மனம் மாறி விண்ணரசின் மதிப்பீடுகளைத் தேடுகின்றேனா? செபம் : ஆண்டவரே! நான் தினமும் மனம்மாறி உம்மையே சிக்கெனப் பற்றிக் கொள்ள எனக்கு வரம் தாரும். 4. இயேசு உருமாற்றம். இறைவாக்கு: ஆறு நாள்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களைமட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின. அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். பேதுரு இயேசுவைப் பார்த்து, "ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது.. மாற். 9:2-7 சிந்தனை: இயேசு தாபோர் மலையில் உருமாறியபோது மோசேயும் எலியாவும் அவருக்குத் தோன்றிப் பாடுகளைப் பற்றிப் பேசினர். மோசே, சட்டத்தைக் குறிக்கின்றார். எலியா, தீர்க்கத்தரிசிகளைக் குறிக்கின்றார். கட்டமும் இறைவாக்கும் இவ்வாறு இயேசுவில் நிறைவேறுகின்றன. இயேசுவின் மீது மேகம் நிழலழடுகிறது - தந்தையின் பிரசன்னத்தைக் குறிக்க. மீண்டும் ஒரு முறை தந்தையின் குரல் இயேசுவைத் தனது மகனாக ஏற்று உறுதிப்படுத்துகின்றது. இந்நிகழ்வு வழியாக இயேசு ஒரு நொடிப்பொமுது தனது தெய்வீகப் பண்பை வெளிப்படுத்துகின்றார். நானும் மேகத்தின் நிழலின்கீழ் இறைத்தந்தையின் மகனாக வாழ அழைக்கப்படுகின்றேன். செபம் : ஆண்டவரே! இயேசுவின் உருவில் என்னையும் தூய ஆவியால், மாற்றி நான் உமது பிள்ளை என்பதை உணர எனக்கு வரம் தாரும். 5.இயேசு திவ்விய நற்கருணையை நிறுவியது இறைவாக்கு: பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, "இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள் "என்றார். அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, "இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை" என்றார். லூக். 22:19-20 சிந்தனை: இராஉணவின்போது இயேசு இம்மனுக்குத்திற்குத் தன் உடலையும் இரத்தத்தையும் தியாக அன்பால் கையளித்தார். குருத்துவத்தை நிறுவினார். அன்பின் கட்டளையை விட்டுச் சென்றார். இன்றும் திருப்பலி வழியாகத் தொடர்ந்து நமக்காக, தன் உடலையும் இரத்தத்தையும் கொடுக்கின்றார். நான் பக்தியோடு திருப்பலியில் பங்கேற்று இயேசுவைப் போல பிறர் வாழ்வு பெறும் பொருட்டு என் வாழ்வைத் தியாக அன்பால் கையளிக்கின்றேனா? ஏழை எளியோர் வாழ்வு பெற எனது பணத்தை நேரத்தை திறமைகளை அன்பை அவர்களோடு பகிர்ந்து கொள்கின்றேனா? செபம் : ஆண்டவரே, உமது அதிமிக மகிமைக்காக, மக்களின் நலனுக்காகவே நான் வாழ எனக்கு அருள் தாரும். செபமாலை முடிக்கின்ற செபம்: முதன்மை வானதூதரைன அதிதூதரான புனித மிக்கேலே, வானதூதர்களான புனித கபிரியேலே, இரபேலே திருத்தூதர்களான புனித பேதுருவே, பவுலே, யோவானே நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் இப்பொழுது வேண்டிக்கொண்ட இந்த ஐம்பத்து மூன்று மணிச மன்றாட்டையும், எங்கள் புகழுரைகளோடு சேர்த்து, புனித கன்னி மரியாவின் திருப்பாதத்திலே பாத காணிக்கையாக வைக்க உங்களை மன்றாடுகிறோம். ஆமென்.
1. இயேசு பூங்காவனத்தில் இரத்தவியர்வை வியர்த்தது. இறைவாக்கு: அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது. அவர் இறைவேண்டலை முடித்துவிட்டு எழுந்து சீடர்களிடம் வந்தபோது அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். லூக். 22:44-45 சிந்தனை சோதனை வந்த பொழுது இயேசு தந்தையிடம் செபிக்கின்றார். இறைத்தந்தையின் சித்தம் நிறைவேண்டுமென்று செபிக்கிறார். துன்பதுயர வேளைகளில் செபத்தில் ஈடுபடமால் நான் இறைவனை நொந்து கொண்டு அவரிடமிருந்து அகன்று தூரப் போகின்றேனா? இயேசு செபித்ததனால் வானதூதர் ஒருவர் அவருக்கு ஆறுதல் கூறி அவரது மனநிலையை உறுதிப்படுத்துகின்றார். நானும் இறைச் சித்தப்படி செபித்தால் கட்டயாம் வானதூதர் எனக்கும் ஆறுதல் அளிப்பார் என்று நம்புவேன் என்ற பக்குவம் எனக்கு உண்டா? செபம் : ஆண்டவரே! துன்பவேளியில் எனக்கும் மன உறுதியைத் தாரும். 2. இயேசு கசையால் அடிக்கப்பட்டது இறைவாக்கு: பின்னர் பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான்.யோவா. 19:1 சிந்தனை: மனிதர்களின் கையால் மனுமகன் அடிபடுகின்றார். பிறர்க்கு நன்மையே செய்தபுவூடல் மனிதனின் தன்னலத்தால் பதம் பார்க்கப்படுகின்றது. நான் எனது ஐம்புலன்களை அடக்காமல் மனம் போனபோக்கில் சிற்றின்பத்திற்கு என்னையே கையளித்துள்ளேனா, தூயவரான இயேசு பரபாஸ் என்ற கொலைகாரனோடு ஒப்பிடப்படுகின்றார். அன்று ஓசன்னா! என்று அறிக்கையிட்டவர்களே இன்று சிலுவையில் அறையும் அவனை என்று கொக்கரிக்கின்றனர். எனது வாழ்விலும் பல சமயங்களில் இயேசுவைப் புறக்கணித்து இவ்வுல மதிப்பீடுகளைப் பெரிதுப்படுத்துகின்றேனா? செபம் : ஆண்டவரே! துன்பங்கள் வரும் பொழுது துவண்டு போகாமல் நாட வரம் தாரும்! 3. இயேசுவுக்கு முள்முடி தரிக்கப்பட்டது இறைவாக்கு: அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, யூதரின் அரசரே, வாழ்க! ; என்று சொல்லி ஏளனம் செய்தனர்: மத். 27:28-29 சிந்தனை: மகிமையின் கிரீடத்தைத் துறந்து முள்முடி சூடப்படும் இயேசுவைப் பார். பலமுறை நான் அகந்தையோடு நான் தான் இவ்வுலகின் மையம் என்று கருதியுள்ளேன். வணங்காமுடியாக நான் என் கருத்துதான் முக்கியம் என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்துள்ளேன். தாழ்ச்சியோடு பிறருடைய கருத்துக்கு பலவேளைகளில் நான் செவிமடுத்ததில்லை. இயேசுவின் பணிவான குணத்தில் நானும் பங்கு பெறுவேன் என்று தீர்மானிப்பேன். செபம் : ஆண்டவரே! என் வாழ்வில் வரும் அவமானங்களைப் புன்னகையோடு ஏற்றுக் கொள்ள அருள்புரியும்! 4. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லல் இறைவாக்கு: இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு மண்டை ஓட்டு இடம்; என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர். யோவா. 19:17 சிந்தனை: ஒரு கள்வனைப்போல, ஒரு கொலையாளியைப்போல, ஒரு குற்றவாளியைப்போல இயேசு அவமானத்தின் சின்னமாகிய சிலுவையைச் சுமந்து செல்கிறார். நம் பாவங்களை அவர் சுமந்து நம்மை விடுவிக்க இவ்வாறு சிலுவையை ஏற்றுக்கொண்டார். அவரது காயங்களால் நாம் குணமடைகிறோம். எனது வாழ்வில் வரும் சிலுவைகளை துன்ப துயரங்களை நான் சுமக்க எவ்வளவு தயக்கம் காட்டுகிறேன்! இக்கட்டான நிலைகளில் நான் இறைவனின் சித்தத்தை அறிய முற்படுகின்றேனா? அல்லது அவரது சித்தத்தை ஒதுக்கித் தள்ளி நான் போன போக்கில் செல்கின்றேனா? செபம் : ஆண்டவரே! உம் சித்தத்தை அறிந்து அதன்படி நடக்க எனக்கு அறிவுத் தெளிவைத் தாரும்! 5. இயேசு சிலுவையில் உயிர் விடுதல் இறைவாக்கு: ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று. கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது. தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். லூக். 23:44-46 சிந்தனை: சிலுவையின் அடியில் அன்னை மரி வீரத்தாயாக நிற்கின்றார். தன் அன்பு மகன் கள்வர் மத்தியில் சிலுவையில் தொங்குவதைப் பார்த்துத் தாயின் உள்ளம் சுக்குநூறாய் உடைந்திருக்காதா? தனக்கென்றிருந்த இறுதி பொக்கிஷமாகிய தனது தாயை எனது தாயாக இயேசு கையளிக்கின்றார். 'இதோ! உன் தாய்! என்னே இயேசுவின் தியாக அன்பு! 'ஆன்மதாகம் கொண்டு தாகமாய் இருக்கின்றேன்" என்கிறார் இயேசு. என் வாழ்வில் இயேசுவின் தாய் நடந்த பாதையில் நான் செல்கின்றேனா? ஆன்ம தாகத்தால் இயேசுவின் அன்பைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் ஆசை எனக்குண்டா? செபம் : ஆண்டவரே! கல்வாரிக் குன்றில் பாடுபடும் இயேசுவோடு நானும் பங்கேற்று என் பகைவர்களை மன்னிக்கும் வரம் தாரும்! செபமாலை முடிக்கின்ற செபம்: முதன்மை வானதூதரான அதிதூதரான புனித மிக்கேலே, வானதூதர்களான புனித கபிரியேலே, இரபேலே திருத்தூதர்களான புனித பேதுருவே, பவுலே, யோவானே நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் இப்பொழுது வேண்டிக்கொண்ட இந்த ஐம்பத்து மூன்று மணி மன்றாட்டையும், எங்கள் புகழுரைகளோடு சேர்த்து, புனித கன்னி மரியாவின் திருப்பாதத்திலே பாத காணிக்கையாக வைக்க உங்களை மன்றாடுகிறோம். ஆமென்.
1. இயேசு உயிர்த்தெழுதல் இறைவாக்கு: பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள். அவர் அவர்களிடம் "திகிலுற வேண்டாம்: சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்: அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்: அவர் இங்கே இல்லை: இதோ, அவரை வைத்த இடம்." மாற். 16: 6,7 சிந்தனை இயேசு சாவின் மீது வெற்றி கொள்கிறார். மானிடமகன் பாடுகள் பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார் என்ற இறைவாக்கை இயேசு நிறைவேற்றிக் காட்டுகிறார். மகதலா மரியா, இயேசுவின் மீது வைத்திருந்த ஆழ்ந்த அன்பிற்குச் சனமானமாக முதன்முதல் அவளுக்குத் தன்னையே வெளிப்படுத்துகிறார். உயிர்த்த ஆண்டவரின் செய்தி: . 'அஞ்சாதீர்கள் உங்களுக்கு அமைதி உண்டாகுக" என்பதாகும். பாவத்திற்கு மரித்து நிலைவாழ்விற்கு இட்டுச் செல்லும் பாதையை நான் தேடுகிறேனா? அன்பு, அமைதி, மகிழ்ச்சி என்ற உயிர்ந்த ஆண்டவரின் கொடைகளை நான் தேடி அடைய முயற்சிக்கிறேனா? செபம் : ஆண்டவரே! உயிர்த்த ஆண்டவரின் அமைதி என்று என்றும் எந்நாளும் என்னோடு நிலைத்து நிற்க அருள்தாரும். 2. இயேசு விண்ணேற்றம் அடைதல் இறைவாக்கு: இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். மாற். 16:19 சிந்தனை: என் தந்தையின் வீட்டில் பல வீடுகள் உண்டு. நான் முன்னே செல்கின்றேன் என்ற உறுதி மொழியைக் காத்து, இயேசு விண்ணகம் செல்கின்றார். இவ்வாழ்க்கையின் துயரங்களை வென்றால், விண்ணகத்தில் என்ற ஓர் இடம் உண்டு என்ற நம்பிக்கையில் நான் வாழ்கின்றேனா? சாவுக்குப்பின் வெற்றி, வெற்றிக்கு பின் நிலைவாழ்வு உண்டு என்ற நம்பிக்கையில் என் வாழ்வைத் தைரியத்தோடு நான் வாழ்கின்றேனா? செபம் : ஆண்டவரே! என் வாழ்வை வெற்றிகரமாக நடத்தி, இயேசுவோடு ஒரு நாள் விண்ணகத்தில் மகிமையோடு அரசாள்வேன் என்ற நம்பிக்கையை எனக்குக் கொடுத்தருளும்! 3. தூய ஆவியாரின் வருகை இறைவாக்கு: பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது.மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்.தி.ப.2: 1-4 சிந்தனை: பெந்தகோஸ்து பெருவிழாவின்போது தூய ஆவியானவர் அக்கினி நாவின் வடிவில் வந்திறங்கி மக்களுக்கு அருள் பொழிவு கொடுத்தார். சிதறிக்கிடந்தவர்களை ஒரு குடும்பமாக ஒன்று சேர்த்தார். கொடைகளை அள்ளித் தெளித்து கோழையாக இருந்தவர்களை வல்லமையுள்ள இறைத்தூதர்களாக மாற்றினார். திருச்சபை என்ற குழந்தை பிறக்கும் அந்த வேளையில் அன்னை மரியாள் தாயாக இருந்து செயல்படுகின்றாள். ஆவியானவரின் கொடைகளைப் பெற்ற இயேசுவின் சாட்சியாய் வாழ நான் தாகம் கொண்டிருக்கின்றேனா? செபம் : ஆண்டவரே! என் வாழ்வில் தொடர் பெந்தெகோஸ்தே அனுபவத்தை நான் வல்லமையோடு உமக்குச் சாட்சியான வாழ்வு வாழ வரம் தாரும்!! 4. அன்னை மரியாளின் விண்ணேற்பு இறைவாக்கு: அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்: "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்: உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்: தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்: செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார். தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார் ".லூக். 1:44-55 சிந்தனை: மரியாளின் தாழ்நிளை கண்டு இறைத்தந்தை அவளை உயர்த்துகின்றார். தலைமுறை தலைமுறையாய் அவரது இரக்கம் நினைவுக் கூறப்பட்ட வேண்டுமென்று இறைவன் அன்னை மரியாளை உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு அழைத்துச் சென்று அவளை மகிமைப்படுத்துகின்றார். "வல்லவராம் என் இறைத்தந்தை என்னையும் உயர்த்தி வருகின்றார்." என்று நம்பி நான் நம்புகின்றேனா? விண்ணகம் என் தாய்நாடு என்று நம்பி அருள் வாழ்வைத்தேடி வாழ்கின்றேனா? செபம் : ஆண்டவரே! அன்னை மரியாளின் பரிந்துரையை நான் நாடி உம்மையே என் இலக்காகக் கொள்ள வரம் தாரும்! 5. கன்னி மரியாள் விண்ணுலக மண்ணுலக அரசியாக முடிசூடப்பட்டது. இறைவாக்கு: வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது: பெண் ஒருவர் காணப்பட்டார்: அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்: நிலா அவருடைய காலடியில் இருந்தது: அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார். தி.ப :11-1 சிந்தனை: அன்னை மரியாள் இயேசு பிறக்கும் முன் சொன்ன "ஆம்" என்ற அதே வார்த்தையைச் சிலுவையின் அடியில் நின்ற போதும் மீண்டும் சொல்லி வீராங்கனையானள். இறைச் சித்தத்திற்கு அடிபணிந்ததால் இறைமகன் இயேசுவை இவ்வுலகிற்கு அளிக்கும் உன்னத கருவியானாள். ஆகவே, இறைவன் அவளை விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டியது எவ்வளவு பொருத்தம். எத்துணை உண்மை! பேருண்மை! கடவுளை நம்பியவள் ஏமாந்து போகவில்லையே! எனக்கும் அதே பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அன்னை மரியின் பரிந்துரையை நாடுகின்றேனா? செபம் : ஆண்டவரே! கடந்ததை மறந்துவிட்டு வரும் பரிசை நினைத்து மகிழ்ந்து நான் வாழ அருள் தாரும்! செபமாலை முடிக்கின்ற செபம் : முதன்மை வானதூதரான அதிதூதரான புனித மிக்கேலே, வானதூதர்களான புனித கபிரியேலே, இரபேலே திருத்தூதர்களான புனித பேதுருவே, பவுலே, யோவானே நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் இப்பொழுது வேண்டிக்கொண்ட இந்த ஐம்பத்து மூன்று மணி மன்றாட்டையும், எங்கள் புகழுரைகளோடு சேர்த்து, புனித கன்னி மரியாவின் திருப்பாதத்திலே பாத காணிக்கையாக வைக்க உங்களை மன்றாடுகிறோம். ஆமென்.