இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்துவ குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும்
சகல உபகாரங்களையும், சொல்ல முடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து
நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம்.
நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.
தேவரீர் எங்களை ஆசீர்வதித்து, இப்போதும் எப்போதும்
உமது திரு இருதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும்.
தவறி எங்களில் யாராவது உமது திரு இருதயத்தை நோகச் செய்திருந்தால்
அவர் குற்றத்துக்கு நாங்கள் நிந்தைப் பரிகாரம் செய்கிறோம்.
உமது திரு இருதயத்தைப் பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக் கொண்டு
அவருக்கு கிருபை செய்தருளும்.
இதுவுமன்றி உலகத்திலிருக்கும் எல்லா குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம்.
பலவீனர்களுக்கு பலமும், விருத்தாப்பியருக்கு ஊன்று கோலும்,
விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்குத் தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும்.
ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள், அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டில்
தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக.
இயேசுவின் இரக்கமுள்ள திரு இருதயமே! சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே,
இந்த விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.
அவர்களை ஆசீர்வதியும்.
அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும் தெய்வ பயத்தையும் வளரச் செய்யும்.
ஜீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும்
மரணசமயத்தில் ஆறுதலாகவும் இருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம்.
திவ்விய இயேசுவே, முறை முறையாய்
உமது திருச்சிநேகத்தில் ஜீவித்து மரித்து நித்திய காலமும்
எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும். - ஆமென்.